‘வேந்தர் மூவிஸ்’ மதன் மாயமான வழக்கு: பாரிவேந்தரிடம் விசாரணை நடத்தப்படும் - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

‘வேந்தர் மூவிஸ்’ மதன் மாயமான வழக்கு: பாரிவேந்தரிடம் விசாரணை நடத்தப்படும் - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

வேந்தர் மூவிஸ் மதன் மாயமானது தொடர்பாக அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மதனைக் கண்டுபிடிக்க மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணனை சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றம் நியமித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை 2-ம் நாளாக நேற்று நீதிபதிகள் எஸ்.நாக முத்து, வி.பாரதிதாசன் ஆகியோர்முன்பு நடந்தது. அப்போது மருத்துவ சீட்டுக்காக மதனிடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜூம், மதனின் தாயார் தரப்பில் வழக்கறிஞர் இன்பென்ட் தினேஷூம் ஆஜராகி வாதிட்டனர்.

தமிழக அரசு தரப்பில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை குற்ற வியல் வழக்கறிஞர் ஆர்.ராஜ ரத்தினம் ஆஜராகி, ‘‘தனிப் படை போலீஸாரி்ன் விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள் ளது. வரும் ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் மதனைக் கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்துவோம். அந்தக் காலக்கெடுவுக்குள் கைது செய்ய முடியவில்லை என்றால், உயர் நீதிமன்றம் தகுந்த முடிவை எடுத்துக் கொள்ளலாம்’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்புக்கு இடம் வாங் கித் தருவதாகக் கூறி ரூ. 73 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப் பட்டவர்கள் தரப்பில் 111 புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் இந்த மோசடி தொடர் பாக இதுவரை ஒரே ஒரு வழக்கு மட்டும்தான் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த மோசடியில் தொடர் புடைய சுதிர், அருள், சண்முகம், பவுலின் போன்றவர்களிடம் இதுவரை விசாரணை செய்யவில்லை. பணம் பெற்றதற்கான ரசீதில் உள்ள சுதிரின் கையெழுத்தை இதுவரை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை.

இந்த மோசடி அனைத்தும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடம் வாங்கித் தருவ தாகக் கூறித்தான் நடந்துள்ளது. ஆனால் இதுவரை அந்த பல்கலைக் கழக நிறுவனர் பாரிவேந்தரிடம் விசாரணை நடத்தவில்லை. இவர் களிடம் விசாரணை நடத்துவதில் போலீஸாருக்கு ஏதும் தயக்கம் உள்ளதா?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் பாரிவேந்தரிடமும் விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘வரும் ஆகஸ்டு 30-ம் தேதிக்குள் மதனைக் கண்டுபிடித்து ஆஜர் படுத்தாவிட்டால் விசாரணை வேறு அமைப்புக்கு மாற்றப்படும்’’ என்று எச்சரித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in