

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தீர்வு காணும் விதமாக பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளதையடுத்து அவரது முயற்சிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஜல்லிக்கட்டு கோரிக்கையை வலியுறுத்தி விடிய விடிய போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மாணவர்களையும், இளைஞர்களையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்தித்து இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என்றாலும், பிரதமரை நாளை நேரில் சந்தித்து "அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்துகிறேன்" என்று முதல்வர் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எப்படியாவது நடத்தப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் முதல்வரின் இந்த டெல்லிப் பயணம் வெற்றிப் பயணமாக அமைய வாழ்த்துகிறேன்.
அதேநேரத்தில் மாணவர்களும், இளைஞர்களும், அனைத்து கட்சியினரும் ஜல்லிக்கட்டு கோரி தீவிரமாக போராடுகிறார்கள். தங்கள் உணர்வுகளை உளப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த தருணத்தில் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் மட்டுமே அனுப்பி, போராடுபவர்களுடன் பேசுவதை தவிர்த்து, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று இளைஞர்களையும், மாணவர்களையும் சந்திக்க வேண்டும்.
அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்கள், இளைஞர்களின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக் கட்சி பிரநிதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்தித்தால், தமிழகத்தின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.