Published : 06 Nov 2013 09:20 AM
Last Updated : 06 Nov 2013 09:20 AM

சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கி றார். அடுத்த மாதம் பறக்கும் பாதையில் படிப்படியாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்ப டும் என்று அதிகாரி கூறினார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இரு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையும், பறக்கும் பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 9 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையும், 16 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதையும் (இருபுறமும்) அமைக்கப்பட்டு, தண்டவாளம் பதிக்கப்பட்டுவிட்டது.

அடுத்த ஆண்டில் ரயில் ஓடும்

முதல்கட்டமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 பெட்டிகள் கொண்ட முதலாவது மெட்ரோ ரயில், கடந்த ஜூன் மாதம் கப்பல் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

கோயம்பேட்டில் 115 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்துக்காக 800 மீட்டர் நீளத்தில் பிரத்யேக டெஸ்ட் டிராக் அமைக்கப்பட்டுள்ளது. யாரும் குறுக்கே நுழையாமல் இருப்பதற்காக இருபுறமும் வேலியும் போடப்பட்டுள்ளது.

12 விதமான சோதனைகள்

கடந்த 15 நாட்களுக்கு முன்பு, பணிமனையில் இருந்து பேட்டரியில் இயங்கும் இயந்திரம் மூலம் டெஸ்ட் டிராக்குக்கு மெட்ரோ ரயில் இழுத்து வரப்பட்ட து. அங்கு ரயிலின் மின் சப்ளை, விளக்குகள், ஏ.சி. வசதி, பிரேக், இன்ஜின் செயல்திறன் உள்பட 12 விதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டெஸ்ட் டிராக்கில் சிறிது தூரம் ரயில் இயக்கிப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கோயம்பேடு பணிமனையில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைக்கிறார். 100 மீட்டர் தூரம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. முன்னதாக மெட்ரோ ரயிலில் ஏறி, அதில் உள்ள வசதிகளை முதல்வர் பார்வையிடுகிறார்.

இதையடுத்து மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் டிசம்பர் 15-ம் தேதி வரை நடக்கும். பின்னர் கோயம்பேடு - வடபழனி இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து ஆலந்தூர் வரை படிப்படியாக சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்படும்.

மே மாதம் வெள்ளோட்டம்

அடுத்த ஆண்டு மே மாதம், தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில் மெட்ரோ ரயில் வெள்ளோட்டம் விடப்படும். ஜூன் மாதத்தில் இருந்து கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று உயர் அதிகாரி கூறினார்.

கோயம்பேடு பணிமனையில் சோதனை ஓட்டத்துக்காக மெட்ரோ ரயில் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x