

மதுரையில் உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் அலுவலகத்தின் அருகே மர்மப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை நெல்பேட்டை கிழக்கு வெளி வீதியில் உள்ளது உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் எம்.அக்பர் அலியின் அலுவலகம். அங்கு, இன்று மதியம் 12.45 மணியளவில் பலத்த சத்தத்துடன் மர்மப் பொருள் வெடித்துள்ளது.
இது குறித்து அக்பர் அலி கூறுகையில்: தீடீரென பலத்த சத்தம் கேட்டவுடன், ஒரு வேளை அருகில் இருந்த என் உறவினர் வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்திருக்குமோ என்ற சந்தேகத்தில் அவரது வீட்டுக்குள் சென்றேன். ஆனால் வீட்டுக்கு வெளியே இருந்து தான் புகை பரவிக்கொண்டிருந்தது.தெருவில் இருந்த சிலர், மர்மப் பொருள் வெடித்த இடத்தில் தண்ணீர் ஊற்றி அணைத்துக் கொண்டிருந்தனர் என்றார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கிருந்து சில பேட்டரிகள், ஒயர்கள், ஒரு பிளாஸ்டிக் பாட்டில், ஆகியனவற்றைக் கைப்பற்றினர். இவை அனைத்தும் அக்பர் அலியின் கார் அருகே இருந்தே எடுக்கப்பட்டன. காரை முழுமையாக சோதித்தப் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.