Published : 17 Jun 2017 09:18 AM
Last Updated : 17 Jun 2017 09:18 AM

கோவை காந்திபுரம் அருகே மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தனிப்படை தீவிர விசாரணை

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகம் மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நேற்று காலையில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு, அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அருகே விழுந்து வெடித்துள்ளது. இதில், காரின் ஒரு பகுதி மற்றும் அலுவலக ஜன்னல் பகுதிகள் சேதமடைந்தன.

கண்காணிப்புக் கேமரா

மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அலுவலகம் அருகே வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் காட்சிப் பதிவுகளை வைத்து ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மார்க்சிஸ்ட் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதி களில் வைக்கப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்களையும் போலீ ஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்த நபர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநகர காவல் துறை உதவி ஆணையர் சுந்தர ராஜன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் பரவியதும், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கட்சி அலுவலகத் துக்குச் சென்று, அங்கிருந்த நிர்வாகிகளிடம் சம்பவம் குறித்து விசாரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும், இந்த தாக்குதல் சம்ப வத்தைக் கண்டித்தும், சம்பந்தப் பட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் கோவை சிவானந்தா காலனி பகுதியில் மதச்சார் பற்ற கட்சிகள் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதவாத சக்திகள்

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக் குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் மக்களின் ஒற்று மைக்காகவும், மத நல்லிணக்கத் துக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. பல்வேறு சந்தர்ப்பங் களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தபோது, கோவையின் தொழில், அமைதி, ஒற்றுமையைப் பாதுகாப்பது, கலவரம் ஏற்படும் சூழலைத் தடுப்பது ஆகிய பணி களில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் பிரச்சினைகளுக்காகவும் போராடி வருகிறது.

இந்நிலையில், சில மதவாத அமைப்புகள், நாடு முழுவதும் மார்க் சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மீதும், கட்சி அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புகுந்த நபர்கள், பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். கோவையிலும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது. இது போன்ற மிரட்டல்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சி யது கிடையாது. மதவாத சக்தி களை தனிமைப்படுத்த தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த சம்பவத்தையடுத்து, மாநகர காவல்துறை துணை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், கோவை வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம், ராம் நகரில் உள்ள இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகங் களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x