Published : 24 Jun 2015 08:05 AM
Last Updated : 24 Jun 2015 08:05 AM

எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது ஏன்?- ஜெயலலிதா புகாருக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்

தோல்வி பயத்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் முந்தைய அமைப்பான ஜனசங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழிசை, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

தோல்வி பயத்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் என்றால் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். இது தெரிந்துதான் எல்லோரும் போட்டியிடுகிறோம். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

ஆளுங்கட்சியின் முறைகேடுகளை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை. தேர்தலில் தோற்பதுகூட நியாயமானதாக இருக்க வேண்டும். இதனால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக வரலாற்றில் தோல்வி பயம் என்பதே கிடையாது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது. விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்துள்ளது. இதனால், ஏற்பட்ட குழப்பத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தெளிவு கிடைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் 177-க்கும் அதிகமான நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் யோகா தினம் அரசு சார்பில் கொண்டாடப்படவில்லை. மதுவை விற்கும் அரசு, ஆரோக்கியத்துக்கான யோகா தினத்தை கொண்டாட மறந்ததில் ஆச்சரியம் இல்லை. யோகா தினத்துக்கு மதச்சாயம் பூசி குளிர்காய நினைக்கும் எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு தமிழக அரசு பயந்துவிட்டதா என்பது தெரியவில்லை.

யோகா தினத்தை கொண்டாடிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x