Published : 25 Mar 2017 06:48 PM
Last Updated : 25 Mar 2017 06:48 PM

மக்கள் நலனுக்காக செயல்படுவதில் பேரவையில் முதலிடம் திமுகவுக்குதான்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்கள் நலனுக்காக செயல்படுவதில் பேரவையில் முதலிடம் திமுகவுக்குதான் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடித வடிவிலான அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவையில் அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கவில்லை என்பதை வாக்களித்த மக்களே உணர்ந்திருக்கிறார்கள். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அதிகப்படுத்தியும், போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மறைமுகக் கட்டணங்களை விதித்தும் மக்களை வஞ்சித்த அரசு, வரியில்லா நிதிநிலை அறிக்கை என்ற போலிப் பெருமையுடன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

சட்டமன்ற மாண்பு, மரபின்படி நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு வெளியே எடுத்துச் செல்லக் கூடாது. ஆனால், அதையும் மீறி நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு எடுத்துச் சென்றார். இது, பேரவை மாண்புக்கும், மரபுக்கும் உரியதல்ல என்பதுதான் திமுகவின் குற்றச்சாட்டு.

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம், கூட்டுறவுக் கடன் ரத்து போன்றவற்றில் அதிமுகவினர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்தபோது, அவற்றை ஆதாரங்களுடன் ஆணித்தரமாக மறுத்து, உண்மைகளைப் பதிவு செய்தோம்.

இந்தியா சுதந்திரமடைந்த 1947-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் நடைபெற்ற அத்தனை ஆட்சிகளிலும் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் காரணமாக ஏற்பட்ட நிதிச்சுமை ரூ.1 லட்சம் கோடி கடன். ஆனால், 2011-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை ஆட்சி செய்யும் அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால் மட்டும் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேலான நேரடிக் கடன் சுமை ஏறி, தற்போது தமிழக அரசின் கடன்தொகை ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் கோடி என்ற மோசமான நிலையில் உள்ளது.

இதனால் ஒவ்வொரு தமிழரின் தலையிலும் ரூ.36 ஆயிரத்துக்கு மேல் கடன் சுமத்தப்பட்டு தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலையைத்தான் அதிமுக அரசு உருவாக்கி இருக்கிறது. இதையெல்லாம் பேரவையில் எடுத்துக் கூறியபோது ஆட்சியாளர்களிடம் இருந்து உரிய பதில் வரவில்லை.

நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத நிலையையும் அதனால் மக்கள் படுகின்ற அவல நிலையையும் எடுத்துச் சொன்னால், பொதுமக்கள் போராடவில்லை. திமுகதான் போராட்டம் நடத்தியது என்று அமைச்சர் பதில் தந்தார். தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து திமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுபோல அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கவனஈர்ப்புத் தீர்மானங்களை கொண்டு வந்தோம்.

சட்டப்பேரவையில் எதிர்கட்சி வரிசையிலே இருந்தாலும், மக்கள் நலனுக்காக செயல்படுவதில் பேரவையில் முதலிடம் திமுகவுக்குதான். எண்ணிக்கையிலும் முதலிடம் பெறும் காலம் விரைந்து வருகிறது. சட்டமன்றத்தைப் போலவே மக்கள் மன்றத்திலும் செயல்படுவோம். இடைத்தேர்தல் களம் நமது தொடர் வெற்றிகளுக்கான முன்அறிவிப்பாக அமையப் பணியாற்றுவோம்'' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x