

மக்களிடையே நோய்கள் பரப்பும் கொசுக்களை உற்பத்தி நிலையிலேயே ஒழித்து, கொசுக்களை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: கொசு ஒழிப்புக்காக களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அழிக்க கொசுப்புழு கொல்லி மருந்து தெளித்தல், புகை மருந்து அடித்தல் போன்றவற்றின் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை செவ்வனே நிறைவேற்ற, மேலும் களப்பணியாளர்களை நியமனம் செய்தல், கொசுப்புழுக் கொல்லி மருந்துகள் வாங்குவதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூரை சீரமைப்புக்கு ரூ.6 கோடி நிதி:
இதே போல், சென்னை, அரசினர் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையின் மேற்கூரையினை சூரிய வெளிச்சம் ஊடுருவி பரவும் வகையில் அமைத்திட ரூ.6 கோடியே 86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டடத்தை பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து கட்டியுள்ள நிலையில் கட்டடத்தின் மூன்றாவது வட்டத்தில் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு மருத்துவ கருத்தரங்க தளத்தின் மேல், முடிவுப் பெறாத மாட விதானத்தின் (dome) கட்டடப் பணிகளை முழுமையாக முடித்து, எஞ்சியுள்ள பணிகளை நிறைவேற்றவும், மேற்கூரையினை சூரிய வெளிச்சம் ஊடுருவி பரவும் வகையில் அமைத்திடுவதற்காகவும் 6 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள்.