

காவிரி பிரச்சினையில் தீர்வு காணும்விதமாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர்.
இது தொடர்பாக வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்க வலியுறுத்த வேண்டும். ஆனால், கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காவிரி போன்ற நதிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். முதல்கட்டமாக மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்க வேண்டும். பிறகு பல்வேறு மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்க வேண்டும். இதன்மூலம் மழை வெள்ள பாதிப்புகளையும், வறட்சியையும் தவிர்க்க முடியும். கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழகத்துக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 15 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது. இந்த தண்ணீர் போதுமானதல்ல. கர்நாடகத்தில் தேர்தல் வரவிருப்பதால் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க வழிவகுக்கவில்லை. எனவே, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்துக்கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து முறையிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.