

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசுத்துறைகளில் 5 ஆயிரத்து 451 பணியிடங்களை நிரப்புவதற்கான (Group IV) அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும், விண்ணப்பிப்பவர்களுக்கான கடைசி தேதி இன்றுடன் நிறைவு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த மூன்று நாட்களாகவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். தேர்வாணையத்தின் இணையதளம் முடங்கியது போன்ற நிலை ஏற்பட்டு ஐந்து, ஆறு மணி நேரங்கள் போராடியும் விண்ணப்பிக்க முடியாமல் ஆயிரக்கணக்கானோர் திரும்பியிருக்கிறார்கள்.
இன்று காலையிலும் அதே நிலைதான் தொடர்கிறது. மேலும், பாதிக்கப்படுபவர்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலானவர்களாக உள்ளனர்.
எனவே, ஆன்லைன் விண்ணப்பம் தவிர வேறு வாய்ப்புகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் விண்ணப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும் எனவும், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறோம்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.