

சர்க்கரை ஆலைகள் வழங்க வேண் டிய ரூ.2 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தலை மைச் செயலகத்தை முற்றுகை யிட முயன்ற கரும்பு விவசாயிகள் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந் தனர். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு சேப்பாக்கம் விருந்தி னர் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலை வருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் கையில் கரும்புடன் திரண்டு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அவர்கள் தலைமைச் செயலகம் நோக்கி செல்லாதவாறு தடுப்பதற்காக நூற் றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
சுமார் 2 மணி நேர ஆர்ப்பாட் டத்துக்குப் பிறகு தலைமைச் செயலகம் நோக்கிச் செல்ல முயன்ற சுமார் 400 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், ‘‘தமிழக அரசு அறிவித்த கரும்பு விலையை 24 தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக தரவில்லை. தனியார் ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,420 கோடியை தமிழக அரசு வட்டியுடன் பெற்றுத்தர வேண்டும். அத்துடன் கூட்டுறவு, பொதுத்துறை ஆலைகள் தர வேண்டிய ரூ.265 கோடி நிலுவைத் தொகையையும் உடனே வழங்க வேண்டும். நடப்பாண்டில் கரும்புக்கு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியே முற்றுகை போராட்டம் நடத்தினோம். கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேறும் வரை எங்களின் போராட்டம் தொடரும்’’ என்றார்.
கைது செய்யப்பட்ட கரும்பு விவசாயிகள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.