

டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் பணவீக்கம், பொருளாதார மந்த நிலை, என பல்வேறு பிரச்சனைகளை நாட்டு மக்கள் எதிர் கொண்டிருக்கின்ற நிலையில், இவற்றிற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், மாதா மாதம் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக்கொண்டே வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இன்று முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு உயர்த்தியிருப்பது ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் என்றும் அதற்கு தான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்ற மாதம் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திய போது, சர்வதேச அளவிலான விலை உயர்வு பற்றியும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததையும் சுட்டிக் காட்டின. ஆனல் தற்போது சர்வதேச அளவிலான கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையிலும், வழக்கம் போல டீசல் விலையை உயர்த்தியிருப்பது நியாயமற்ற செயல் என்று கூறியுள்ளார்.
பண வீக்கத்தையும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டே செல்வது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கவும்,அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரவும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றுமத்திய அரசை வலியுறுத்துவதோடு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதா மாதம் டீசல் விலையை உயர்த்த வழங்கியுள்ள அதிகாரத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.