

வியாசர்பாடி மேம்பாலம் - பேசின் பாலம் இடையே ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கிக்கொள்வதால், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
வடசென்னையில் வசிப்பவர்கள் சென்ட்ரல், பாரிமுனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றுக்கு செல்ல முக்கிய இணைப்புச் சாலையாக வியாசர்பாடி - பேசின் பாலம் சாலை உள்ளது. அந்த சாலையின் இடையே உள்ள குறுகிய ரயில்வே சுரங்கப்பாதையால் அங்கு போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாக இருந்தது.
அதைப் போக்க, அங்கு ரூ.80 கோடியில் 1,720 மீட்டர் நீள மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2010-ல் தொடங்கப்பட்டது. ஒரு வழிக்கான பணி முடிந்துவிட்டது. மற்றொரு வழிக்கான பணி இன்னும் நடந்துவருகிறது. பணி முடிந்த பாலம் கடந்த நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
தற்போது வடசென்னையில் இருந்து சென்ட்ரல் நோக்கி வரும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் சிக் காமல் செல்ல வியாசர்பாடி மேம்பாலத் தையே பயன்படுத்துகின்றனர். அந்த மேம்பாலத்தில் இருந்து அவர்கள் பேசின் பாலம் வழியாக செல்ல வேண்டும். பேசின் பாலம் குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வியாசர்பாடி மேம்பாலம் முதல் பேசின் பாலம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் ஆம்புலன்ஸ்களும் சிக்கி, நோயாளிகளை நேரத்தோடு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வியார்பாடியை சேர்ந்த ‘தேவை இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எ.த.இளங்கோ கூறியதாவது:
வியாசர்பாடி மேம்பாலம் திறக்கப் பட்டதில் இருந்து, அதன் வழியாக வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆனால், அதற் கேற்ப பேசின் பாலம் அகலமாக இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வடசென்னை பகுதியில் இருந்து விபத்து, மகப் பேறுக்காக ராஜீவ்காந்தி மருத்துவ மனைக்கோ, ஸ்டான்லிக்கோ செல்லும் ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் வியாசர் பாடி மேம்பாலம், பேசின் பாலம் வழியாக சென்றால் மட்டுமே எளிதாக மருத்துவமனைகளை அடைய முடியும். அந்த வழியாக தினமும் 50-க்கும் மேற்பட்ட நடையில் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் ஆம்புலன்ஸ்கள், நேரத்தோடு மருத்துவ மனைகளை சென்றடைய முடிவதில்லை. இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வியாசர்பாடி பாலத்தை கட்டும்போதே உரிய ஆய்வு நடத்தி, பேசின் பாலத்தையும் அகலப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் தற்போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அரசு உரிய ஆய்வு நடத்தி ஒரு திட்டத்தை அறிவித்தால், அதை செயல் படுத்துவோம். பேசின் பாலம் ரயில்வே சார்பில் கட்டப்பட்டது. அதை அகலப் படுத்த வேண்டும் என்றால், அரசும், ரயில்வே நிர்வாகமும் பேசி உரிய திட்டம் வகுக்க வேண்டும்’’ என்றார்.