

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய துரப்பன நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் நிலம், நீர்வளம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதிக்கும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட வில்லை என்று ஓஎன்ஜிசி செயல் இயக்குநரும், காவிரி அசெட் மேலாளருமான குல்பிர் சிங் தெரிவித்தார்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துடன் ஓஎன்ஜிசி நிறுவனத்தைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானதையடுத்து, திருச்சியில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச் சூழல்- வனத்துறை அமைச்சகம், மத்திய சுரங்க பாதுகாப்புத் துறை இயக்ககம், மாசு கட்டுப்பாடு வாரியங்கள் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி நிலம், நீர் வளம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஓஎன்ஜிசி செயல்பட்டு வருகிறது.
சமூக பொறுப்புணர்வுத் திட்டத் தின் கீழ் ஓஎன்ஜிசி செயல்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்காக குடிநீர், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.20 கோடியை ஓஎன்ஜிசி செலவிட் டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பணியாற்றி மத்திய, மாநில அரசு களின் வளர்ச்சிக்கு ஓஎன்ஜிசி பங்களிப்பைச் செய்து வருகிறது என்றார்.
ஓஎன்ஜிசி காவிரிப் படுகை மேலாளர் பவன்குமார் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் வாயு இருப்பதாக கண்டறியப்பட்ட கிணறுகளில் வணிகரீதியிலான பயன்பாட்டுக்குக்கூட வாயு பெற முடியாத 10 கிணறுகள் மூடப்பட்டு விட்டன. தற்போது புள்ளான்விடுதி, நல்லாண்டார் கொல்லை, வாணக்கன்காடு ஆகிய இடங்களில் மட்டும்தான் கிணறுகள் உள்ளன.
நெடுவாசல் பகுதியில் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் இருப்பினும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அதிகபட்சமாக 50 ஏக்கர் வரைதான் நிலம் தேவைப்படும். தற்போதைய நிலையில், ஓஎன்ஜிசி வசம் 5 ஏக்கர் நிலமே உள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பது குறித்து மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நெடுவாசல் மக்கள் பிரதிநிதிகள் 70 பேரை அழைத்து, மத்திய அமைச்சர் முன்னிலையில் விளக்கம் அளித்தோம். தேவைப்பட்டால், மீண்டும் விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளோம். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அரசால்தான் செயல்படுத்தப்படும். ஆனால், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்றார்.
ஓஎன்ஜிசி துரப்பன தலைமைப் பொறியாளர் ராஜசேகரன் மற்றும் நாராயணமூர்த்தி உள்ளிட்ட ஓஎன்ஜிசி அதிகாரிகள் உடனிருந்தனர்.