Published : 18 Feb 2014 12:00 AM
Last Updated : 18 Feb 2014 12:00 AM

தி.மு.க. நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மதுரையில் பரவும் வெடிகுண்டு கலாச்சாரத்தால் பொதுமக்கள் பீதி

மதுரையில் மு.க அழகிரியின் ஆதரவாளர் வீட்டில் மர்ம நபர்கள் திங்கள்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசினர். மதுரை அண்ணா நகர் வைகை காலனியில் வசிப்பவர் கே.மருதுபாண்டியன் (53). இவர் மு.க அழகிரியின் ஆதரவாளர். மாநகராட்சி 33-வது வட்ட தி.மு.க. செயலாளராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார்.

இந்த வீட்டின் தரைத்தளத்தில் தங்கை பவானி குடும்பத்தினரும், முதல் தளத்தில் மருதுபாண்டியன் குடும்பத்தினரும், இரண்டாவது தளத்தில் அவரது சகோதரரும், வழக்கறிஞருமான கே.விஜயபாண்டியன் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநில மாநாட்டில் பங்கேற்ற மருதுபாண்டியன், ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கிருந்து புறப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை 2.10 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். பின்னர் காலை 7 மணி அளவில் எழுந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறிக் கிடந்தது. சுவர்களில் கரும்புகை படிந்திருந்தது. அங்கிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் உருகிக் கிடந்தன.

இது குறித்து அண்ணா நகர் போலீஸாருக்கு மருதுபாண்டியன் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாநகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா, உதவி ஆணையர் சக்திவேல் மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் தடுப்புப் பிரிவு, தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா கூறுகையில், ‘சிறிய கண்ணாடி பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, அந்த வெடிகுண்டை சுவரில் வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. இதில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’என்றார்.

மதுரையில் அண்மைக் காலமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அ.தி.மு.க., தி.மு.க. எனக் கட்சிப் பாகுபாடின்றி நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்படுவது பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது

9 நாளில் 4 இடங்களில் வெடிகுண்டு

மதுரையில் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு குண்டு வெடிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. மதுரை மாவட்ட ஏடிஎஸ்பியாக இருந்த மயில்வாகனன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் இந்த வழக்குகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறைந்திருந்தன.

இரு மாதங்களுக்கு முன் அந்த தனிப்படை கலைக்கப்பட்டது. இந்நிலையில், மதுரையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. பிப்ரவரி 9-ம் தேதி முனிச் சாலை அ.தி.மு.க. பொதுக்கூட்ட மேடையில் குண்டுவெடிப்பு, உத்தங்குடி ரிலையன்ஸ் மார்க்கெட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுப்பு, சனிக்கிழமை இரவு கீழமாரட் வீதியில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டின் அலுவலகம் முன் டைம் பாம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் குறித்து விசாரிக்க மாநகர போலீஸ் சார்பில் 4 தனிப்படைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x