

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் 163-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழ்த்தாத்தா என்று அழைக் கப்படும் உ.வே.சாமிநாதய்யர் பழங்கால ஓலைச் சுவடிகளை கண்டறிந்து அவற்றில் உள்ள இலக்கியங்களை பதிப்பித்தவர். 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை பதிப்பித்துள்ளார். 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளையும், கையெழுத்து ஏடுகளையும் சேகரித்து அவற்றிலுள்ள விவரங்களை வெளிக் கொண்டுவந்தவர் உ.வே.சாமிநாதய்யர். அவரின் 163-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சாமிநாதய்யர் பணியாற்றிய மாநிலக் கல்லூரியில் அவரது சிலை உள்ளது. பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் உ.வே.சா சிலையின் அருகில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் வெங்கடேசன், எம்எல்ஏக்கள், உ.வே.சா. குடும்பத்தினர், மாநிலக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.