முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீச்சு

முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீச்சு
Updated on
1 min read

ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது இளைஞர் ஒருவர் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் மீது காலணி வீசிய இளைஞர் சாலமன் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.

டெல்லியில் ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. இது ஒரு மர்ம மரணம் எனக் கூறி, அவரது தந்தையான ஜீவானந்தம் டெல்லி போலீஸிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, டெல்லி எய்ம்ஸ் தடயவியல் துறை தலைவர் சுதிர்குமார் குப்தா தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துக்குழுவினர் முத்துக்கிருஷ்ணன் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். அதற்குப் பிறகு முத்துக்கிருஷ்ணன் உடல் புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து சேலத்திற்கு சாலை வழியாக அவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது.

முத்துக்கிருஷ்ணன் தந்தை, உறவினர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் பயணித்தனர்.

இந்நிலையில், முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சேலம் வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சாலமன் என்ற இளைஞர் காலணியை வீசினார். காலணி அவர் மீது விழவில்லை எனினும் அந்த இளைஞர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சாலமனை விடுவிக்க வேண்டும் என்று கோரி முத்துக்கிருஷ்ணனின் வீட்டின் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

படங்கள்: எஸ்.குருபிரசாத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in