

ராம்குமாரின் மரணம் குறித்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில் அதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு புழல் மத்திய சிறையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது ஏற்கத்தக்கதல்ல.
கொடிய குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டியது காவல்துறையினரின் கடமை. அதற்கு முன்பாகவே அவர்கள் லாக் -அப்களிலும், சிறைகளிலும் உயிரிழப்பது தடுக்கப்பட வேண்டும்.
ராம்குமாரின் மரணம் குறித்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில் அதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.