தர்மயுத்தம் தொடரும்: ஓ.பன்னீர்செல்வம் சூளுரை

தர்மயுத்தம் தொடரும்: ஓ.பன்னீர்செல்வம் சூளுரை
Updated on
1 min read

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் மீட்டெடுக்கும்வரை எங்களது தர்மயுத்தம் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே. சசிகலா உள்பட மூவருக்கும் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுகவின் முதல்வர் பதவிக்கு, சசிகலாவால் பரிந்துரைக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை முதல்வராக பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் இன்று (வியாழக்கிழமை) அழைப்பு விடுத்தார்.

ஆளுநரின் முடிவு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது,"மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் மீட்டெடுக்கும்வரை எங்களது தர்மயுத்தம் தொடரும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இக்கட்சி சசிகலா குடும்பத்திடம் செல்லாத வண்ணம் தடுப்போம்" என்று கூறினார்.

முன்னதாக, ஜெயலலிதா இறப்புக்கு பின், தமிழக முதல்வராக அதிமுகவின் பன்னீர்செல்வம் தொடர்ந்தார். எனினும் அக்கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்ற கருத்தை அதிமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள் முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

புதிய முதல்வரை நியமிக்கும்வரை தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் மறைந்த முதல்வர் ஜெயலிலதாவின் நினைவிடத்துக்குச் சென்ற ஓ. பன்னீர்செல்வம் அங்கு சில நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்ட பின், செய்தியாளர்களிடம் சசிகலா பற்றிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும் கட்டாயத்தின் பெயரிலேயே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார். இதனையடுத்து தமிழக அரசியல்களம் சூடுப்பிடித்தது குறிப்புடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in