

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகில் இதம்பாடல் கிராமத்தில் உள்ள சிதைந்த சத்திரத்திலும், அம்மன் கோயிலிலும் 19-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் உள்ளன. அதில் அப்போதைய சேதுபதி சீமையின் ராணி தர்மசத்திரம் மற்றும் கோயில் திருப்பணி செய்த தகவல் இடமபெற்றுள்ளது.
சேதுபதி மன்னர்கள் தமிழுக்கும், சமுதாயத்துக்கும் சமய வேற்றுமை இல்லாமல் தெய்வீக திருப்பணிகள் செய்துள்ளனர். இவர்களது காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மூன்று வழிகளில் பாதயாத்திரையாக ராமேசுவரத்துக்கு மக்கள் வந்துள்ளனர். போக்குவரத்து வசதியில்லாத இவ்வழித் தடங்களில் தலைச்சுமையுடன் தினமும் வரும் நூற்றுக்கணக்கான பக்தர் களுக்கு தர்மசத்திரங்கள் கட்டி களைப்பையும் பசியையும் போக்கி உள்ளனர். மன்னர்களைப் போன்றே தர்மப் பணிகளை பட்டத்து ராணிகளும் செய்துள்ளனர். கி.பி.1795-ல் சேதுநாடு ஆங்கிலேயர்கள் கைக்குச் சென்றது.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகில் இதம்பாடல் கிராமத்தில் உள்ள சிதைந்த சத்திரம்.
அதன்பின் 1803-ல் ராமநாதபுரத்தின் ஜமீன்தாரினியாக ராணி மங்களேஸ்வரி நாச்சியார் பொறுப்பேற்றார். அவர், தனது முன்னோர்களைப் போன்றே ஆன்மிகப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளார். உத்தரகோசமங்கை, பள்ளிமடம், ராமநாதபுரம், நயினார்கோவில் மற்றும் பல கோயில்களுக்கு ஏராளமான நன்கொடைகளை வழங்கி உள்ளார். மதுரை செல்லும் வழியில் போகலூர் அருகில் பயணிகளுக்கு சத்திரம் ஒன்றை கட்டிக்கொடுத்து பசியையும் களைப்பையும் போக்கியுள்ளார். அதுவே இன்று பெரிய ஊராகி சத்திரக்குடி என்று அழைக்கப்படுகிறது.
முத்துவீராயி நாச்சியார்
அவரைத் தொடர்ந்து ஜமீன்தாரினியாக முத்துவீராயி நாச்சியார் பதவியேற்றார். இவரும் பல அறச்செயல்களை செய்துள்ளார் என்பதை சிக்கல் அருகில் உள்ள இதம்பாடல் கண்மாய் கரையோரம் உள்ள சிதைந்த சத்திரத்திலும், கரையில் உள்ள அம்மன் கோயிலிலும் உள்ள 19-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
இக்கல்வெட்டுகளை பார்வையிட்ட கீழக்கரையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு கூறியதாவது:
நெல்லை சீமையில் இருந்து சாயல்குடி வழியாக ராமேசுவரம் வரும் பயணிகள், இளைப்பாறி பசி போக்குவதற்கு இதம் பாடலில் சத்திரம் கட்டித் தந்துள்ளார், அப்போதைய ராணி முத்து வீராயி நாச்சியார். கி.பி.1836 துண்முகி வருடம் தை மாதம் 16-ம் தேதி சத்திரம் கட்டப்பட்டதாக கல்வெட்டில் உள்ளது. அச்சத்திரத்தில் ஓய்வெடுக்க நீண்ட திண்ணையும், பெரிய அறை, சமையல் அறை போன்றவையும் அமைந்துள்ளன.
வனம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டு.
இக்கட்டிடத்தில் ஒரு கல்வெட்டும் அதன் அருகில் கண்மாய்கரையில் உள்ள அம்மன் கோயிலில் ஒரு கல்வெட்டும் உள்ளது. இவை இரண்டும் ராணி முத்துவீராயி நாச்சியாரின் சமயம் மற்றும் சமுதாயப் பணிகளுக்கு ஆதாரமாக உள்ளது. வனம்மன் கோயில் கல்வெட்டில் கி.பி.1837 ஏவிளம்பி பங்குனி மாதம் ராணி முத்து வீராயி நாச்சி யாரும், முத்துச் செல்லாத் தேவரும் வனம்மன் கோயி லுக்கு திருப்பணி செய்ததாக தெரிவிக்கப்பட்டுளளது.
இவர் ராணியாக இருந்த இந்தச் சமயத்தில்தான் தன் சகோதரன் முத்து செல்லாத்தேவருடன் இணைந்து தர்ம காரியங்களை செய்துள்ளார்.
இவர்கள் இதம்பாடலில் பாறைக் கற்களால் கட்டிய வன அம்மன் கோயில் தற்போது கவனிப்பாரற்றும், சத்திரம் பாழடைந்தும் காட்சியளிக்கிறது. இதுபோன்ற வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும். இக்கல்வெட்டுகளின் வரலாற்று ஆதாரங்கள் குறித்து தகவல்கள், சேதுபதி மன்னர்களின் வரலாற்று ஆசிரியர் ஷி.வி.கமால் எழுதிய சேதுபதி வரலாறு, ராமநாதபுரம் அருங்காட்சியகத்தின் தொல்லியல் கையேடு ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
உ.விஜயராமு.