Published : 17 Mar 2017 10:33 AM
Last Updated : 17 Mar 2017 10:33 AM

மாமல்லபுரம் கடற்கரையில் அகற்றப்படாத குப்பை: சுற்றுலாப் பயணிகள் முகம் சுளிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரம் சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள கடற்கரைக் கோயில் மற்றும் குடவரை சிற்பங்களின் அழகைக் கண்டு ரசிப்பதற்காக, நாள் தோறும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள், உள்ளூர் என ஏராளமான சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். மேலும், மாசிமக நாளையொட்டி இருளர் இன மக்கள் கடற்கரையில் மூன்று நாட்கள் இயற்கை குடில்கள் அமைத்து, அவர் களின் குலதெய்வமான கன்னியம் மனை வழிபட்டுச் செல்வார்கள். இந்நிகழ்ச்சி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கடற்கரையில் நடைபெற்றது. இதற்காக, இருளர் இன மக்கள் மரங்கள் மற்றும் தார்பாய், பிளாஸ்டிக் பொருட் களால் குடில் அமைத்தனர்.

அவர்களின் பாரம்பரிய வழிபாடு முடிந்து அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். ஆனால், கடற் கரையில் அமைக்கப்பட்ட குடில் களின் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை அகற்றப் படாமல் உள்ளதால், கடற்கரை அலங்கோலமாக காட்சியளிக் கிறது.

இதனால், கடற்கரைக் கோயில் மற்றும் கடற்கரை அழகை ரசிக்க வரும் சுற்றுலா வாசிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங் காங்கே இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமைகளின் உடல்கள் அகற்றப்படாமல் உள்ளதால், கடற் கரையில் கடும் துர்நாற்றம் வீசு கிறது. அதனால், பேரூராட்சி நிர் வாகம் இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என, சுற்றுலா வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, உள்ளூர் வாசிகள் சிலர் கூறியதாவது: இருளர் இன மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் இந்த குப்பையை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது. அதனால், இதற்கு நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது: கடற்கரையில் உள்ள குப்பையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இறந்து கரை ஒதுங்கி யுள்ள ஆமைகளின் உடல்களை அகற்றி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x