Last Updated : 08 Dec, 2013 12:00 AM

 

Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM

லண்டன் வரை புகழ்பெற்ற வக்கீல் வழக்கு

கோவையில் நடைபெற்ற இரு கொலை வழக்குகள் தொடர்பாக தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த வழக்கறிஞர் தம்பதி, மத்திய சிறையில் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர். ஆனால், இவர்களின் புகழ் 'தி ஏசியன் ஏஜ்' என்ற பத்திரிகை மூலம் லண்டன் வரை சென்றுவிட்டது.

கோவை ரியல் எஸ்டேட் அதிபர் மணிவேல், அம்மாசை கொலை வழக்கில் வழக்கறிஞர் ராஜவேல் மீதான குற்றம் வலுவானதாக அறியப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்படுமானால், மோகனாவை காட்டிலும், வழக்கறிஞர் ராஜவேல் அதிக தண்டனையை சுமக்க வேண்டி வரும். வழக்கறிஞர் ராஜவேல், கோவை மாநகர காவல்துறையை மட்டும் சமாளித்தால் போதும், ஆனால், இவரது மனைவி மோகனா, கோவை மட்டும் இல்லாது ஒடிசா மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையின் கேள்விக் கணைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஒடிசா பயணம் ஆரம்பம்

இனி, கோவை - ஒடிசா, ஒடிசா - கோவை என வழக்கு முடியும் வரை அவரது வாழ்க்கைப் பயணம் தொடரும் என்று தெரிவிக்கின்றனர் காவல்துறையினர். தற்போது, "ரைட் மேக்ஸ் டெக்னோ டிரேட் இந்தியா இண்டர்நேஷனல்" என்ற எம்.எல்.எம். நிறுவனம் மூலமாக, அப்பாவி மக்களுக்கு எதிராக, மோகனா அரங்கேற்றிய மோசடி குறித்து அந்த மாநில காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர்.

இதற்காக, கோவை மாநகர காவல்துறையை அவர்கள் தொடர்புகொண்டு வருகின்றனர். மாநகர காவல்துறையின் காவல் விசாரணை முடிந்த பின்னர், ஒடிசா காவல்துறை, மோகனாவை போலீஸ் விசாரணைக்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

ஒடிசா எம்.எல்.எம். மோசடி

கடந்த 2011-ம் ஆண்டில், 6 பேர் இணைந்து ரைட் மேக்ஸ் டெக்னோ டிரேட் இந்தியா இண்டர்நேஷனல் என்ற எம்.எல்.எம். நிறுவனத்தை ஒடிசா பெர்ஹாம்பூர் பகுதியில் தொடங்கினர். இந்நிறுவனத்தை தொடங்குவதற்கு முக்கிய ஆதாரமாக, தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாசன், சிவக்குமார் ஆகியோர் இருந்தது தெரியவருகிறது.

வழக்கு விஷயமாக, வழக்கறிஞர் ராஜவேலுவுடன் அறிமுகமாகி, இவர்களின் நட்பு தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர், ஒடிசாவில் நிதி நிறுவனத்தை தொடங்குவதற்கு சீனிவாசன் முக்கிய நபராக இருந்துள்ளார். நிதிநிறுவனத்தில் பங்குதாரர்களில் ஒருவராக ராஜவேலுவையும் சேர்ந்துக்கொள்ள அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராஜவேலு, தனது உடல்நிலை, தொழிலைக் கருத்தில் கொண்டு, மனைவி மோகனாவை, அந் நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக மாற்றியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அந் நிறுவனத்தின் தலைமை பொறுப்பையும் மோகனாவே கவனித்து வந்துள்ளார்.

ஏமாற்றியது எப்படி?

பொதுமக்கள் கட்டும் பணத்துக்கு மாதந்தோறும் 10 சதவீதம் வட்டி, 33 மாதங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படுவதுடன், கட்டிய தொகை கடைசியாக இரட்டிப்பாக்கி வழங்கப்படும் என அந் நிறுவனம் சார்பில் பொதுமக்களிடம் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் சேர்ந்த வாடிக்கையாளர், வேறு ஒருவரை அறிமுகம் செய்து வைத்து பணத்தைக் கட்ட வைத்தால், கட்டும் பணத்தில் 10 சதவீதம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சங்கிலித் தொடர் வாடிக்கையாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்படுகின்றனர். இவ்வாறாக சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து, பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணம் கட்டிய வாடிக்கையாளர்களுக்கு, தொடர்ச்சியாக இரு மாதங்களுக்கு மட்டும், 10 சதவீத வட்டி கணக்கிட்டு பணத்தை வழங்கியுள்ளனர். பின்னர், வாடிக்கையாளர்களுக்கு வட்டித்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது. இவ்வாறாக மொத்தமாக பொதுமக்களிடம் இருந்து வசூலித்த கோடிக்கணக்கிலான பணத்துடன் அந் நிறுவனம் மூடப்படுகிறது.

பணத்தை இழந்தவர்களின் புகார்களைக் கணக்கிட்டு, சுமார் ரூ.12 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கி ன்றனர். ஆனால், உண்மையில் மோசடி தொகை அதற்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த டேனியல்குமார் என்பவர் ரூ. 7.30 லட்சம் வரை கட்டியுள்ளார். அவருக்கு, 2 மாதங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ.90 ஆயிரம் வரை வழங்கிவிட்டு, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அவருக்கு வட்டி பணம் தரவில்லை.

இது குறித்து டேனியல்குமார் ஒடிசா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ் வழக்கில் சீனிவாசன் மட்டும் கைது செய்யப்பட்டு பெர்ஹாம்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இம்மோசடியில் படித்தவர்களும் அதிகம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x