Published : 16 Jun 2016 08:37 PM
Last Updated : 16 Jun 2016 08:37 PM

மக்கள் வாழ்வாதாரத்துக்கு நம்பிக்கை அளிக்காத ஆளுநர் உரை: ஜி.ஆர். கருத்து

ஆளுநர் உரை தமிழக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கிஞ்சித்தும் நம்பிக்கையளிப்பதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டமன்ற 15வது பேரவையின் முதல் கூட்டத்தை துவக்கி வைத்து ஆளுநர் ஆற்றியுள்ள உரை கடந்த அதிமுக ஆட்சியின் நடவடிக்கைகளின் தொகுப்பாக அமைந்துள்ளதே தவிர, புதிய ஆட்சியிடம் மக்களுக்குள்ள எதிர்பார்ப்புகளை ஈடு செய்வதாக அமையவில்லை.

தமிழகத்தின் நலனுக்கும், உரிமைகளுக்கும் விரோதமாக மத்திய பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. உதாரணமாக காவிரி மேம்பாட்டு ஆணையத்தையும், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவையும் தொடர்ந்து அமைக்க மறுத்து வருகிறது. இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாகி வரும் தமிழக மீனவர்களை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவித்திட நடவடிக்கை இல்லை. 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளாலும், மத்திய அரசின் திட்டங்களில் நிதி வழங்குவதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களாலும் தமிழகத்திற்கு பெரும் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய மத்திய அரசை எதிர்த்து வலுவான குரல் கொடுப்பதற்கு மாறாக கடந்த பல ஆண்டுகளாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்படுவதைப் போன்றே வற்புறுத்துவோம் என இப்போதும் கூறியிருப்பது தமிழக உரிமைகளைக் காவு கொடுப்பதாக அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு அன்றாடம் படுகொலைகளும், பகல் கொள்ளைகளும், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சமூக விரோத சக்திகள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன என கூறியிருப்பது முழு பூசணிக்காயை பிடி சோற்றில் மறைப்பதாகும்.

ஏற்கெனவே உயர் நீதிமன்ற உத்தரவின்படி மதுரையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையின் மீதும், தூத்துக்குடி மாவட்டம் தாது மணல் கொள்ளை குறித்து விசாரித்து சமர்ப்பித்த அறிக்கையின் மீதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மௌனம் சாதித்து விட்டு, தற்போது புதிய கிரானைட் கொள்கையும், தாது மணல் விற்பனையை அரசே ஏற்பதும் என அறிவித்துள்ளது உண்மை குற்றவாளிகளை மூடி மறைப்பதற்கு வழி வகுத்து விடக்கூடாது என வற்புறுத்துகிறோம்.

நெல் உள்ளிட்டு விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றனர். ஆளுநர் உரையில் விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை அறிவிப்புகள் ஏதுமில்லை. மாறாக, விவசாயிகளை சந்தைகளுடன் இணைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்பது அரசு உரிய விலை தீர்மானிப்பதையும், கொள்முதல் செய்வதையும் கைகழுவும் ஏற்பாடாக உள்ளது.

தனியார் கல்வி நிலையங்களில் நடைபெறும் கட்டணக்கொள்ளையைத் தடுக்கவும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி வழங்க வேண்டிய 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாதது மற்றும் அரசு ஆரம்பப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவதை தடுப்பதற்கும் ஆளுநர் உரையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 4,70,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என சொல்லப்பட்ட போதிலும், அது விளம்பரமாக மட்டும் உள்ளது. இதை திரும்ப குறிப்பிட்டுள்ளதை தவிர வேலை வாய்ப்புக்கான புதிய திட்டங்கள் ஏதுமில்லை.

அதிகரித்து வரும் சாலை விபத்துகள், மற்றும் குழந்தை திருமணங்களை தடுத்திட உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அனுதினமும் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது, இலவச வீட்டு மனை, பட்டா வழங்குவது போன்றவை குறித்தும் ஏதும் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

ஒட்டு மொத்தத்தில் ஆளுநர் உரை தமிழக மக்களின் வாழ்வாதாரம் குறித்து கிஞ்சித்தும் நம்பிக்கையளிப்பதாக இல்லை'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x