

உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு முடி வெடுக்கப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல், 2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்தோம். அதன்படி, சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் 6 கட்ட ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. முதலில் வேட்பாளர்களை அழைத்து ஆலோசனை செய்தோம். அதன்பிறகு, மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் உள் ளிட்டோரை அழைத்துப் பேசி கட்சி வளர்ச்சிக்கான கருத்துகள் கேட்கப்பட்டன. சில மாவட்டங் களுக்குச் சென்று தொண்டர் களின் கருத்துகளையும் கேட்டறிந் துள்ளேன்.
சட்டப்பேரவை தேர்தலின்போது தமிழகத்தில் மாற்று அணிக்கான தேவை உள்ளது என்பதை எல்லோரும் உணர்ந்தோம். அதனடிப்படையில், கூட்டணி அமைத்தோம். மக்கள் நல கூட்டணி என்பது 4 கட்சிகள் சேர்ந்து அமைத்த கூட்டணி. வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகிய நான்கு தலைவர்களும் மக்கள் நல கூட்டணியோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கடந்த ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தலுக்கான உடன்படிக்கையில் தாமக கையெழுத்திட்டது. உடன்படிக்கை யின்படி எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் அறிக்கை களை கூட ம.ந.கூ தனியாகவும், தேமுதிக தனியாகவும், தமாகா தனியாகவும் வெளியிட்டன.
32 வருவாய் மாவட்டங்களை தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், சென்னை, ஈரோடு, கோவை என மொத்தம் 12 மண்டலங்களாக பிரித்திருக்கிறோம். நான் 12 மண்டலங்களுக்கும் சென்று கட்சியின் அனைத்து நிர்வாகி களுடனும் ஆலோசனை நடத்த உள்ளேன்.
இந்த கூட்டங்கள் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும்.
கிராம ரீதியாக கட்சி வளர வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த கூட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.