

தமிழக தலைமைச் செயலாளராக பி. ராம மோகன ராவ் நேற்று பொறுப்பேற்றார்.
தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதில், முதல்வரின் செயலர் நிலை -2 ஆக இருந்த பி.ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டார். இது தவிர, முதல்வரின் செயலர்களாக ஷிவ் தாஸ் மீனா, எஸ்.விஜயகுமார் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று தலைமைச் செயலராக ராம மோகன ராவ் பொறுப்பேற்றார். டிட்கோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், ராம மோகன ராவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
முதல்வரிடம் வாழ்த்து
தொடர்ந்து, நேற்று தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதாவை, புதிய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
1985-ம் ஆண்டு நேரடி ஐஏஎஸ் அதிகாரியான ராம மோகன ராவ், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல்வரின் செயலர் நிலை -2 ஆக நியமிக்கப்பட்டார். முதல்வர் செயலர் நிலை -1 ஆக இருந்த ஷீலா பிரியா ஓய்வை தொடர்ந்து, செயலர் நிலை-1 ஆக ராம மோகன ராவ் செயல்பட்டார். தற்போது தமிழக தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார்.