

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பெயர் மற்றும் புகைப் படத்தை பயன்படுத்த அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்த அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சிக்கு தடை விதிக்கக் கோரி அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது அப்துல்கலாமின் பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி சார்பில் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த 2 வழக்குகளும் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘தேசியத் தலைவர்களின் பெயரை அரசியல் கட்சியினர் பயன்படுத்துவதை தடுக்க முடியாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே அப்துல்கலாம் பெயரை பயன்படுத்தக் கூடாது என அரசியல் கட்சிகளை நிர்ப்பந்திக்க முடியாது’’ என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அப்துல் கலாமின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்த அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சிக்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.