

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்றிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் வெளியுற வுத்துறை அமைச்சருமான இ.அக மதுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து, கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான கே.எம்.காதர் மொய்தீன், தற்காலிக தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயற்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கேரள மாநிலத் தலைவர் சையது அலி ஷிஹாப் முன்னிலை வகித்தார். தற்காலிக தேசிய தலைவர் காதர் மொய்தீன், பொருளாளர் குஞ்ஞாலிக்குட்டி, எம்.பி.க்கள் இ.டி.முகமது பஷீர், பி.வி.அப்துல் வஹாப், தமிழக எம்எல்ஏ முகமது அபுபக்கர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், தற்காலிகத் தலைவராக உள்ள கே.எம்.காதர் மொய்தீன் தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக பி.கே.குஞ்ஞாலிக் குட்டியும், அமைப்புச் செயலாள ராக இ.டி.முகமது பஷீர், பொரு ளாளராக பி.வி.அப்துல் வஹாப் ஆகியோரும் தேர்வாகினர். அகில இந்திய அரசியல் சூழல், தமிழக சட்டப்பேரவை விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காயிதே மில்லத் முகமது இஸ்மா யிலுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட கே.எம்.காதர் மொய்தீனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக கே.எம்.காதர் மொய்தீன் தேர்வான தற்கு திமுக மற்றும் கருணாநிதி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித் துக் கொள்கிறேன். மதச்சார்பற்ற இந்தியாவை போற்றிப் பாது காக்கும் பணியில், தொடர்ந்து பணியாற்றும் காதர் மொய்தீனுக்கு திமுக என்றும் துணையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘எளிமை மற்றும் கொள்கை உறுதியின் அடையாளமாகத் திகழும் காதர் மொய்தீனின் புதிய பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.