Published : 17 Feb 2014 12:00 AM
Last Updated : 17 Feb 2014 12:00 AM

முதல்வர் பிறந்த நாள் விழா மாரத்தான் போட்டி- நான்கு பிரிவுகளில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 11 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதன் செயலாளர் வி.பி.கலைராஜன் எம்எல்ஏ ஏற்பாடு செய்து இருந்த இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயம் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலை முதல், மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வரையிலான 11 கி.மீ. தூரம் நடந்தது.

ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், 17 வயதுக்கு உள்பட்டவர்கள் என 4 பிரிவுகளில் நடந்த இந்த மாரத்தான் போட்டியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பெரும்பாலான கல்லூரி மாணவர்கள், கணிசமான காவல் துறையினர் பங்கேற்ற இந்த போட்டியில், சென்னை மட்டுமல்லாமல், அரக்கோணம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அதுமட்டுமல்லாமல் சென்னை

யில் தங்கியிருக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்களும், இளைஞர்களும் பங்கேற்றனர்.

அதிமுக அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன் மாரத்தான் போட்டியைத் தொடங்கிவைத்தார். நான்கு பிரிவுகளிலும் முதல் பரிசு தலா ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசு ரூ. 20 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம், பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ஆயிரம் ரூபாய் என மொத்தம் ரூ.2.5 லட்சம் வழங்கப்பட்டது.

அப்பரிசுகள் மற்றும் முதல்வர் உருவம் பொறித்த தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள், சான்றிதழ்களை அதிமுக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் வெற்றியாளர்களுக்கு வழங்கினர்.

இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்த 81 வயது முதியவர், 10 வயது சிறுவர்- சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆறுதல் பரிசுகளை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x