

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியாவை, இலங்கை ராணுவம் போரின்போது படுகொலை செய்ததை, மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று திமுக தலைவர் கருணாநிதியை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அவர் குறிப்பிட்டார்.
இசைப்பிரியா படுகொலை தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அந்த வீடியோவை நேற்று நானும் பார்த்தேன். என்னைப் பொருத்தவரை, அந்த டாக்குமென்ட்ரி உண்மையானதுதான். இசைப்பிரியா அவ்வாறு படுகொலை செய்யப்பட்டது கொடூரமான நிகழ்வு. அதற்கு காரணமானவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து கேட்டதற்கு, அது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். அதுகுறித்த முடிவெடுக்கப்பட்ட பின்பு பேசுவோம் என்று அவர் தெரிவித்தார்.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து கேட்டதற்கு, அது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
சேனல் 4 புதிய ஆதாரம் வெளியீடு...
முன்னதாக, இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த 27 வயது இசைப்பிரியாவை, அந்நாட்டு ராணுவம் கொடூர்மான முறையில் கொலை செய்ததற்கான ஆதாரம் அடங்கிய புதிய வீடியோ ஒன்றை, பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. இது, தமிழ் சமூகத்திடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
போருக்குப் பின், இசைப்பிரியா மரணம் குறித்த தகவல் வெளியானபோது, அவர் போரில் இறந்ததாக இலங்கை அரசு தரப்பு விளக்கம் அளித்தது. ஆனால், அவர் உயிருடன் பிடிக்கப்பட்டு, சித்திரவதைச் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
இலங்கையில் இம்மாதம் காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், சேனல் 4 வெளியிட்ட இந்த வீடியோ ஆதாரத்தால், இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.