Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.743 கோடி ஒதுக்கீடு- நிதி அமைச்சர் பேச்சு

முதியோர் ஓய்வூதியம், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு 2013-14-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டை விட ரூ.743 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டப்பேரவையில் 2013-14-ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 2013-14-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், இந்தத் திட்டங்களுக்காக எதிர்பாராச் செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்நிதிக்கு ஈடு செய்வதும்தான் துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.

2013-14-ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகள் ரூ.5,937.66 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க வகை செய்கின்றன. இதில், ரூ.2,709.34 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.3,228.32 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.

முதியோர் ஓய்வூதியம், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு 2013-14-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டைவிட ரூ.743.24 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக சிறப்பு பொங்கல் பைகள் வழங்குவதற்காக ரூ.281 கோடி அனுமதிக்கப்பட்டது.

நபார்டு வங்கி நிதியுதவியுடன் பாலங்களை மேம்படுத்துவதற்காக, அரசு கூடுதல் தொகையாக ரூ.256 கோடி அனுமதிக்கப்பட்டது. திருப்பூரில் பூஜ்ஜியக் கழிவு வெளியேற்றும் அமைப்பை நிறுவுவதற்காக ரூ.150 கோடி அனுமதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், ஒமேகா தொழில் வளாகத்தில் 2 துணை மின் நிலையங்கள் நிறுவுவதற்காக அரசு ரூ.110.57 கோடி அனுமதிக்கப்பட்டது. 2013-14-ம்

ஆண்டு நிதிச் சீரமைப்புத் திட்டத்துக்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு அரசு ரூ.962 கோடி வட்டியில்லா கடனாக அனுமதிக்கப்பட்டது.

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான சம்பளப் பற்றாக்குறையை களைய ரூ.125 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இந்த துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x