

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சேலம், மதுரை மாவட்டங்களில் இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்ற விதித்த தடையயை நீக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் கடந்த இரு தினங்களாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர், விளையாட்டு வீரர்கள என பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடியை இன்று (வியாழக்கிழமை) சந்தித்து பேசினார்.
சந்திப்புக்கு பின், "ஜல்லிக்கட்டு விளையாட்டின் கலாச்சார முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும், தற்சமயம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு உதவியாக இருக்கும்" என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைதியான முறையில் போராடி வந்த இளைஞர்கள் ரயில் மறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் காரைக்காலிருந்து - பெங்களூர் சென்ற பயணிகள் ரயிலை மதியம் 1.15 மணியளவில் 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தடுத்து நிறுத்தி ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதே போன்று மதுரை செல்லூர் ரயில் பாலத்தில் கோவையிலிருந்து நாகர்கோவில் சென்ற பயணிகள் ரயிலை வழி மறித்து இளைஞர்கள் மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஜல்லிக்கட்டுக்கான போரட்டங்கள் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.
மாணவருக்கு காயம்:
ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரி சேலத்தில் ரயில் மீது ஏறி மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் லோகேஷ்(17) என்ற மாணவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் அவருக்கு 50% தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.