

அதிமுகவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் பாஜக ஆதாயம் தேட முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சித்து வருகிறது. தமிழகத்தின் பாரம்பரியமான சமூக நீதி, மதச்சார்பின்மையை பின்னுக்குத் தள்ளி மதவெறி அரசியலை முன்நிறுத்த திட்டமிடுகிறார்கள்.
ஜெயலலிதா வழக்கில் அவருக்காக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வாதாடியது, கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு நெருக்கடி கொடுத்தது என குற்றவாளிகளைப் பாதுகாக்க பாஜக முயற்சித்தது. ஆனால், ஊழலுக்கு எதிராக தாங்கள் போர் தொடுத்திருப்பது போல பாஜக வெளி வேஷம் போடுகிறது. மோடி அரசு தமிழக நலன்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மோடி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
மத்திய பாஜக அரசு மாநிலங்களின் ஆளுநர்களை தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் ஆளுநர்களின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்து. டில்லியிலும், புதுச்சேரியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் அவ்வாறே காய் நகர்த்தப்படுகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸும் இதே அணுகுமுறையையே பின்பற்றியது'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.