Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு: தமிழக தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குறிப்பிட்ட கால வரம்புக்குள் அரசுப் பணிகள் அனைத்திலும் மாற்றுத் திறனாளி களுக்கான இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடங் களை அடையாளம் கண்டு தெரிவிப்பதற்காக அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அரசு நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக் கழகங்கள், அரசு கழகங்களுக்கு இறுதித் தேதியை மாநில தலைமைச் செயலாளர் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கடந்த 19.12.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. மீண்டும் இந்த ஆண்டு ஜனவரி 10, 28, பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்து, ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி எஸ்.மணிகுமார் முன்பு இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி மணிகுமார், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

நீதிபதி தனது உத்தரவில் கூறி யுள்ளதாவது: கடந்த பிப்ரவரி 3-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பு செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜரானார். மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தந்த துறைகளால் இந்த இடங்கள் நிரப்பப்படும் எனறு அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான அறிவிக்கை இன்னும் சில நாள்களில் வெளியாகும் என்று அரசு கூடுதல் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது, மாற்றுத் திறனாளிகள் ஆணை யத்தின் மாநில ஆணையர் ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார். பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்கள், வெவ்வேறு பிரிவு பணியிடங்கள் போன்றவை குறித்து மீண்டும் மதிப்பிட வேண்டியுள்ளது. ஆகவே, நீதிமன்றம் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியுள்ளார். ஆனால் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்ட காலிப்பணியிடங்கள் தொடர்பான விவரங்களை மீண்டும் ஏன் மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை அவர் கூறவில்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை குறிப்பிட்ட கால வரம்புக்குள் நிரப்ப வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. எனினும் இந்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளர் பி.சிவசங்கரன், மாற்றுத் திறனாளிகள் ஆணையத்தின் ஆணையர் டாக்டர் மணிவாசன் போன்ற அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கான நோட்டீஸ் அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு இந்த நீதிமன்றம் தள்ளப்பட்டுள்ளது. ஆகவே, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை ஏன் தங்கள் மீது எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு அந்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றினால், நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை நிறுத்தக் கோரி அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x