

மழைக் காலங்களில் காய்ச்சல் ஏற்பட காரணமாக விளங்கும் கொசுக்களை ஒழிப்பது தொடர்பாக, தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, மழைக் காலங்களில் காய்ச்சல் ஏற்பட காரணமாக விளங்கும் கொசுக்களை ஒழிப்பது குறித்தும், அதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவது குறித்தும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், மழைக் காலங்களில் காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமாக விளங்கும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும், டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் குறித்து மக்களிடைய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
பொது இடங்களில் கொசு உற்பத்தியை குறைத்து அதன் மூலம் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் கொசு உற்பத்தியினை தடுக்கும் நடவடிக்கையாக, புகை மருந்து மூலம் கொசுக்களை அழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்; பருவ மாற்றம் காரணமாக பூச்சிகள் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் வராமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி பாதுகாப்பது, வீடுகளில் மழை நீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்வது, குடிநீரை காய்ச்சி பருகுதல், நீர் பாத்திரங்களை கொசுக்கள் புகாவண்ணம் மூடிவைத்தல், காய்ச்சலுக்கான அறிகுறி ஏதும் ஏற்பட்டால்
அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சை பெறுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் எடுக்கப்பட்டு வருகிறது.
பொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த உயர் அதிகாரிகள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து மேற்பார்வையிட்டு வருவதாகவும்; தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் நிலைமை நாள்தோறும் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்; அனைத்து வகையான காய்ச்சலுக்கு தேவையான மாத்திரை மருந்துகள் போதிய அளவில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் இருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தவிர, எந்தப் பகுதிகளிலும் மூன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தினை கண்டறிந்து, அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், காய்ச்சலை கட்டுப்படுத்த கீழ்காணும் தடுப்பு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
* கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை ஒழிக்கும் வகையில், ஒரு வட்டாரத்திற்கு 10 மஸ்தூர்கள் சுகாதாரத் துறை மூலமாகவும், தேவையான நபர்கள் ஊரக வளர்ச்சித் துறை மூலமாகவும், தேவைக்கேற்ப கூடுதல் பணியாளர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கொசு உற்பத்தியை தடுக்கத் தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் வழங்கப்பட்டுள்ளது.
* 'எலிசா' முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க மாவட்ட அளவில் சோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
* இந்திய முறை மருந்துகள், பராம்பரிய மருத்துவ முறைகளை (நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு அருந்துதல்) ஊக்குவித்து அவை அரசு மருத்துவமனைகளில் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* பூச்சியியல் கண்காணிப்பு அறிக்கையின் அடிப்படையில் தக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான இரத்த அணுக்கள் பரிசோதனைக் கருவி, மருந்துகள், இரத்தக்கூறுகள் மற்றும் இரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
* குறும் படம் மற்றும் விளம்பரங்கள் மூலம், கொசு உற்பத்தியை தடுப்பதற்கான மக்களின் பங்கு குறித்தும், அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அரசால் வழங்கப்படும் மருத்துவ உதவிகள் குறித்தும், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உதவியோடு கொசு உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.
* தேவையான இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
* காய்ச்சல் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. காய்ச்சல் இருக்கும் இடங்களில், காய்ச்சல் குறித்த விவரங்களை 104 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 9444340496 மற்றும் 9361482898 கைபேசி எண்கள் மூலமும், 044-24350496 மற்றும் 044-24334810 தொலைபேசி எண்கள் மூலமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். தகவல் பெறப்பட்டவுடன், அதை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.
* காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள உபயோகமற்ற பொருட்களில் தேங்கியுள்ள நீரிலேயே உற்பத்தியாகிறது. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கொசு மற்றும் கொசுப் புழுக்களை அழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுத்த வருகின்ற போதிலும், இந்த கொசு உற்பத்தியாகும் இடங்களை முழுமையாக ஒழிப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.