

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரண்டு தினங்களுக்கு முன்பு கோப்ரா இணையதளம் வெளிட்டுள்ள லஞ்சம் வாங்கும் எம்.பி.க்கள் குறித்த வீடியோவில் அதிமுகவைச் சேர்ந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் (தென்சென்னை), சுகுமார் (பொள்ளாச்சி) ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளது ஊடகங்களிலும் செய்தித்தாளிலும் வந்துள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணம் வாங்கும்போது எம்.பி.க்களின் முகம் நன்றாக தெரிகிறது.
போலியாக வந்தவர்களை சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனத்தினர் என்று நம்பி வரவேற்று, அமரவைத்து பணத்தை பெற்றுக்கொள்வது வீடியோ பதிவில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதற்கு மேல் லஞ்சம் வாங்கியதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும். இதுபோன்று லஞ்சம் பெறுவதற்கா 40 தொகுதியிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கேட்கிறார் என மக்கள் கேள்வி எழுப்புகின்றணர். இதற்குதான் ஆட்சி செய்யும் வாய்ப்பை அதிமுகவுக்கு மக்கள் வழங்கினார்களா?
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூர் நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடன் இருப்பவர்களும் அவர் பாணியைத் தானே கையாளுவார்கள் என்று மக்கள் கருதுகிறார்கள்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, சாதிக் கலவரம் என சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுபோய் உள்ள நிலையை தினமும் பார்க்கின்றோம். திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளி யாரென்றே தெரியவில்லை. மதுரையில் நடந்த பொட்டு சுரேஷ் கொலையில் குற்றவாளி இன்னும் பிடிபடவில்லை. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று பேசுகிறார். தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட்டு, விலைவாசியைக் கட்டுப்படுத்தி, மின்வெட்டை அகற்றிவிட்டு, சட்டம் ஒழுங்கை செம்மையாக்கி மக்கள் துயரை துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.