

மத்திய அரசை, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சிப்பது புதியதல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக முதல்வர் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். விமர்சனங்கள் எங்களுக்கு புதியதல்ல. ஏனெனில் ஒவ்வொரு முறையும் மத்திய அரசை குற்றம் சாட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். ஆனால் மத்திய அரசு பத்து துரோகங்களை தமிழகத்திற்கு இழைத்ததாக அவர் குற்றம் சாட்டியிருப்பது தவறு" என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ பயிற்சியோ, ஆயுதங்களையோ வழங்கவில்லை என்று பலமுறை விளக்கமளித்த பிறகும், அதே குற்றச்சாட்டை தமிழக முதல்வர் பேசியிருப்பது சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்ற நம்பிக்கையில் தான் ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருநாட்டு மீனவர்களும் அரசு அதிகாரிகள் மத்தியில் பேச வேண்டும் என்ற வேண்டுகோளை மத்திய அரசு உடனே ஏற்று பலமுறை கடிதம் எழுதியும், கூட்டத்திற்கான தேதியை ஒத்திப் போட்டது தமிழக அரசுதான். கச்சத்தீவை மீண்டும் பெறுவதற்கு இதுநாட்டுஅரசுகளும் பேச வேண்டுமே தவிர, நீதிமன்ற விசாரணை அதற்கு முடிவல்ல என தெரிவித்துள்ளார்.
மின் பிரச்சினைக்கு காரணம் ஜெயலலிதா:
தென் மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து இதுக்கும் மின்சாரம் தமிழகதத்திற்கு;தான் அதிகம் என்பதை முதல்வர் அறிவார். இந்தியாவில் உள்ள எல்லா மின் வழித்தடங்களையும் தென்னகத்தோடு இணைத்து எங்கிருந்து வேண்டுமானாலும் தமிழகத்திற்கு மின்சாரத்தை எடுத்துக்கொள்ள வழிவகுத்துள்ளது மத்திய அரசு. கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் உரிய நேரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது கிடைக்கிற 600 மெகாவாட் மட்டுமல்ல, இன்னும் அதிகமாக தமிழகத்திற்கு மின்சாரம் கிடைத்திருக்கும், என்றார்.
தமிழகத்தில் மின்சார கட்டணத்தை ஏற்றிய போதும் பால்விலையை ஏற்றிய போதும், பேருந்து கட்டணத்தை உயர்த்திய போதும் என்ன நியாயம் சொல்லப்பட்டதோ, அது மத்திய அரசுக்கு பொருந்தாதா ? மாநில அரசு விலை உயர்த்தினால் அது நிர்வாகத் தேவை, மத்திய அரசு உயர்த்தினால் அது துரோகமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு இந்த மூன்று ஆண்டுகளில் கொடுத்த நிதி எவ்வளவு என்பதை முதல்வர் வெளியிட வேண்டும். மத்திய அரசின் நிதியில் பல்வேறு திட்டங்களை தங்கள் திட்டங்களாக மாநில அரசு அறிவிப்பதை நிறுத்தி, ஒவ்வொரு திட்டத்திலும் மத்திய அரசின் பங்கீடு எவ்வளவு என்பதை வெளியிட்டால் சாயம் வெளுக்கும்.
அப்போதுதான் மாநில அரசின் திட்டங்களெல்லாம் மத்திய அரசின் நிதியோடு நடப்பது என்பதை மக்கள் அறிவார்கள். இவ்வாறு ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.