

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் வென்ற கோவை மாணவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கோவை பார்க் குளோபல் பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி வைஷ்ணவி(14). இவர் தாய்லாந்து நாட்டில் கடந்த 13, 14-ம் தேதிகளில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்றார். இதில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற வைஷ்ணவி, 2 தங்கப் பதக்கங்களை வென்றதுடன், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.
இவர் ஏற்கெனவே மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 30 நிமிடங்களில் 596 ஆசனங்களையும், ஒரு நிமிடத்தில் 47 ஆசனங்களையும் செய்து இந்திய சாதனைப் புத்தகத்திலும், ஒரு நிமிடத்திலும் 64 ஆசனங்களை செய்து ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
மாணவி வைஷ்ணவிக்கு கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பள்ளியின் தலைமை செயல் அலுவலர் அனுஷா ரவி, முதல்வர் ஹெச்.நடராஜன் உள்ளிட்டோர் பரிசு வழங்கிப் பாராட்டினர்.
இதுகுறித்து மாணவி வைஷ்ணவி கூறும்போது, “கின்னஸ் மற்றும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதே எனது லட்சியம்” என்றார்.