Published : 13 Oct 2014 08:48 AM
Last Updated : 13 Oct 2014 08:48 AM

பிஎஸ்எல்வி சி.26 ராக்கெட் கவுன்ட் டவுண் இன்று தொடங்குகிறது: இறுதிக்கட்ட ஆய்வு பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிக்கான செயற்கைக் கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சியுடன், பிஎஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வரும் 16-ம் தேதி அதிகாலை 1.32க்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான 67 மணி நேர கவுன்ட் டவுண் இன்று காலை 6.32 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து ஆகியவற்றை கண்காணிக்கவும், ஜி.பி.எஸ் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் 7 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2013 ஜூலை 1-ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-ஏவும், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பியும் விண்ணில் செலுத்தப் பட்டன.

மூன்றாவது செயற்கைக் கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம் கடந்த 10-ம் தேதி அதிகாலை 1.56க்கு விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேதி குறிப்பிடாமல் ராக்கெட் விண்ணில் செலுத்தும் திட்டத்தை விஞ்ஞானிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், வரும் 16-ம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-சி செயற்கைக் கோள் வரும் 16-ம் தேதி அதிகாலை 1.32 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மொத்த எடை 1425.4 கிலோ. இந்த செயற்கைக் கோள் காலம் 10 ஆண்டுகளாகும். இதற்கான 67 மணி நேர கவுன்ட் டவுண் இன்று காலை 6.32க்கு மணிக்கு தொடங்குகிறது. இதற்கான இறுதிச் கட்ட பணிகளில் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கைக்கோள் கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை, வாகனங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள் விண்ணில் உள்ள புவி வட்ட பாதையில், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிமீ தூரத்திலும், அதிகபட்சமாக 20,650 கிமீ தூரத்திலும் நிலைநிறுத்தப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x