ஆரோவில் அருகே பல்கலைக்கழக மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: 2 பேருக்கு போலீஸ் வலை

ஆரோவில் அருகே பல்கலைக்கழக மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: 2 பேருக்கு போலீஸ் வலை
Updated on
1 min read

புதுச்சேரி அருகே தமிழக எல்லையான ஆரோவில் பகுதியில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியை பலாத்காரம் செய்ய முயன்று, தப்பியோடிய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்காளம் துர்காப்பூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரசியல் அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் ஆரோவில் அருகே பொம்மையாளர்பாளையம் கடற்கரை பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அந்த மாணவியின் ஆண் நண்பரை விரட்டிவிட்டு, மாணவியை பலவந்தமாக பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அங்கிருந்து தப்பி வந்து ஆரோவில் போலீஸில் புகார் செய்தார்.

இதுகுறித்து ஆரோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பலாத்காரம் செய்ய முயன்று தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

மூடி மறைத்த போலீஸார்?

இச்சம்பவம் நடந்தது 16-ம் தேதி இரவு. 17-ம் தேதி காலை 9 மணிக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இத்தகவல் ஊடகங்களுக்கு கசியாமல் போலீஸார் பார்த்துக்கொண்டனர். ஏன் இத்தகவல் மூடிமறைக்கப்பட்டது என போலீஸ் வட்டாரங்களில் கேட்டபோது, “கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் பயணித்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா வல்லுறவு செய்யப்பட்டு தாக்கப்பட்டார். பின்னர் அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபோல் ஆரோவில் அருகே கடற்கரைக்கு தனது ஆண் நண்பருடன் சென்ற மாணவி வல்லுறவுக்கு ஆளாக்க முயன்றதால் இச்செய்தி வெளியே வராமல் இருக்க காவல்துறை கவனத்துடன் செயல்பட்டது. மேலும் இம்மாணவியின் தந்தை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்பதாலும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நன்கு அறிமுகமானவர் என்பதாலும் கவனமுடன் கையாளப்பட்டது” என்றனர்.

தனிப்படை விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி. நரேந்திரன் நாயர் கூறியதாவது: பல்கலை மாணவியை பலாத்கார முயற்சி செய்தது தொடர்பாக 10 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். அடையாள அணிவகுப்பு நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்த வழக்கு தொடர்பாக எஸ்.ஐ. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிலர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in