Published : 17 May 2017 09:41 AM
Last Updated : 17 May 2017 09:41 AM

தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் போதும்; மரக்கன்றுகளை பராமரிக்க புதிய உத்தி: கால்நடை மருத்துவரின் பொதுச் சேவை

வெயிலின் கொடுமையால் மரக் கன்றுகள் கருகி வரும் நிலையில், தினமும் ஒரு லிட்டருக்கும் குறைவான அளவு தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளைக் காப்பாற்றும் புதிய உத்தியை உருவாக்கியுள்ளார் பெரம்பலூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்.

பெரம்பலூர் மாவட்டம் கொளக் காநத்தம் கால்நடை மருந்தகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்து வருப வர் ராஜேஷ்கண்ணா. மரங்கள் வளர்ப்பதில் தீவிர ஆர்வம் உள்ள இவர், இதற்காக தனது வருவாயில் ஒரு பகுதியை செலவழித்து வருகிறார்.

பெரம்பலூரில் வசித்துவரும் இவர், பின்தங்கிய கிராமமான குரும்பாபாளையத்தை கடந்துதான் தினமும் பணிக்குச் செல்வார். அப்போது, பனங்கூரில் இருந்து குரும்பாபாளையம் வரை உள்ள 3 கி.மீ. தூரத்துக்கு சாலையோரத்தில் மரங்கள் இல்லாததால் அந்த வழியாக செல்வோர் வெயிலுக்கு ஒதுங்கக்கூட நிழல் இல்லாமல் அவதிப்படுவதைக் கண்ட அவர், அப்பகுதியில் மரங்களை வளர்க்க முடிவு செய்தார்.

அதன்படி மரக்கன்றுகளை நடவு செய்த ராஜேஷ்கண்ணாவுக்கு, அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது பெரும் சவாலாக இருந் தது. தண்ணீர் ஊற்றும் பணி யில் அப்பகுதி மக்கள் சிறிது உத வியபோதும், கோடை வெப்பத் தைத் தாக்குப்பிடிக்க இயலாமல் பல மரக்கன்றுகள் கருகிவிட்டன.

இதைக் கண்டு மனம் வாடிய ராஜேஷ்கண்ணா, கோடை வெப்பத் தில் இருந்து மரக்கன்றுகளைக் காப்பாற்ற மாற்று வழியைத் தேடினார். இதையடுத்து, கழிவுப் பொருட்களின் உதவியுடன் புதிய முறையில் சொட்டுநீர் பாய்ச்சி மரக்கன்றுகளைக் காப்பாற்ற முடிவு செய்தார். கடந்த ஆண்டு பரீட்சார்த்த முறையில் இந்த நடைமுறையை அவர் செயல்படுத்தினார். அது வெற்றிகர மாக அமையவே, அதில் மேலும் புதுமைகளைப் புகுத்தி நாளொன் றுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவழித்து மரக்கன்றுகளைக் காப்பாற்றும் வழிமுறையை உருவாக்கினார்.

அதன்படி, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றியபின் குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து வந்து, செடிகளுக்கு சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சி வருகிறார். ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட குளுக்கோஸ் பாட்டிலின் அடிப்பகுதியை அரை வட்ட வடி வில் கத்தரித்து, திறந்து மூடும்படி செய்கிறார். பின்னர், பாட்டிலில் தண்ணீரை ஊற்றி, செடிகளின் அருகே கொஞ்சம் உயர்த்திக் கட்டிவிடுகிறார். குளுக்கோஸ் பாட்டில் செட்டில் உள்ள டியூப் வழியாக செடியின் வேர்ப்பகுதியில் தண்ணீர் சொட்டும்படி செய்கிறார்.

ஒரு பாட்டிலில் உள்ள ஒரு லிட்டர் தண்ணீர் 6 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை வேர்களில் சொட்டும்படி தயார் படுத்தி வைக்கிறார். இதனால், 10 லிட்டர் தண்ணீரை ஒரே தடவை யில் ஊற்றியபோதும், அது போதா மல் கருகிப்போன மரக்கன்றுகள், ஒரு லிட்டர் தண்ணீரைச் சீராக வழங்குவதன் மூலம் செழித்து வளர்கின்றன. பாட்டில் வெயிலில் காய்ந்தபடியே உள்ளதால், ஒன் றரை மாதத்துக்கு ஒருமுறை புதிய பாட்டில் மாற்ற வேண்டும்.

பனங்கூர், குரும்பாபாளையம் கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இப்படி சொட்டு நீரைப் பெற்று செழித்து வளர்ந்து வருகின்றன. மருத்துவமனைகளில் குப்பையில் வீசப்படும் குளுக் கோஸ் பாட்டில் செட்களை பயன் படுத்தி, நவீன சொட்டுநீர் பாசன முறையில் குறைவான தண்ணீர் செலவழித்து, மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார் ராஜேஷ் கண்ணா.

இந்த புதிய செயல் முறையை கண்ட பலர் ஆர்வமுடன் தாங்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

குரும்பாபாளையம் சாலையோரத்தில் அப்பகுதி சிறுவர்களின் உதவியுடன் மரக்கன்றுகளுக்கு சொட்டுநீர் அளிக்கும் வசதியை ஏற்படுத்துகிறார் ராஜேஷ்கண்ணா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x