

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இதில் கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்த 13 பெண்கள் இறந்ததால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, அருகில் உள்ள புதுக்குடி கிராமத்துக்கு சென்றுவிட்டு, சரக்கு ஆட்டோவில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
கச்சிப்பெருமாள் அருகே வந்த போது, திருச்சி-சிதம்பரம் நெடுஞ் சாலையில் எதிரே வந்த சிமென்ட் பவுடர் ஏற்றிய லாரி, சரக்கு ஆட்டோ மீது நேருக்குநேர் மோதியது. இதில் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த ராஜகுமாரி(55), காசியம்மாள்(45), செல்வி, சரஸ்வதி(50), செந்தா மரை(50), சித்ரா(30), ராணி(40), மருதுபாண்டி(32), முனியம்மாள்(60), மணிகண்டன்(25), காமாட்சி(45) ஆகி யோர் பலத்த காயமடைந்து இறந் தனர்.
தகவலறிந்த உடையார்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று படுகாயமடைந்த 14 பேரை மீட்டு, ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
இதில், அன்னமயில், வளர்மதி, வாசுகி, அம்சவள்ளி ஆகி யோர் சிகிச்சை பலனின்றி நேற்று அடுத்தடுத்து இறந்தனர். இதை யடுத்து விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித் தது. இச்சம்பவம் குறித்து உடையார் பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிப்பெருமாள் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை காணப் பட்டதால், அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அனில்குமார்கிரி தலைமையில் 230 போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, 2014-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் அருகே அரசு பேருந்து மீது சிமென்ட் பவுடர் ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் உதவி
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.