

டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நேற்று திடீரென நிர்வாணப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் 28 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியும் பிரதமரை சந்திக்க முடியாததால் விவசாயிகள் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சிக்கான கூடுதல் நிவாரணம், வங்கிக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவற்றை பிரதமரிடம் நேரில் முறை யிடவும் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, அய்யாக் கண்ணு தலைமையில் 7 விவசாயிகளை பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்ல டெல்லி போலீஸார் முடிவு செய்தனர். ஜந்தர் மந்தரில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இடதுபுறம் உள்ள நார்த் பிளாக் நோக்கி அனைவரும் போலீஸ் வாகனத்தில் கிளம்பினர். அங்கு அய்யாக்கண்ணு மட்டும் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் மனுவை வழங்கினார். பிறகு ஜந்தர் மந்தர் திரும்புவதற்காக அனைவரும் போலீஸ் வாகனத்தில் ஏறினர்.
பிறகு திடீரென கீழே இறங்கிய 3 விவசாயிகள், தங்கள் ஆடை களை களைந்துவிட்டு கோஷமிடத் தொடங்கினர். நாட்டின் விவசாயி களை காப்பாற்றுங்கள் என கைகளை உயர்த்திக் கூப்பியபடி இந்தியில் கோஷமிட்டனர். பிறகு முன்புறமுள்ள ராஜ்பாத் சாலை யில் படுத்த விவசாயிகள், முன்னும், பின்னும் உருண்ட படியும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவானது.
இது குறித்து பி.அய்யாக் கண்ணு கூறும்போது, “பிரதமருடன் சந்திக்க வைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி விட்டனர். 28 நாட்களாகப் போராடி வரும் எங்களை சந்திக்க பிரதமர் மறுத்து விட்டார். நாங்கள் இந்த நாட்டின் அடிமைகளாகி விட்டோம். இதுதான் எங்கள் பரிதாபநிலை. இந்த நாட்டின் விவசாயிகள் பரிதாபத்திற்கு உரியவர்களாகி விட்டனர்” என்றார்.
தமிழக விவசாயிகளின் இந்த திடீர் செயலைக் கண்டு போலீஸார் சில நிமிடங்கள் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் விவசாயிகளை மடக்கிப் பிடித்து வேனில் ஏற்றி ஜந்தர் மந்தர் கொண்டு சென்றனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போலீஸ் வட்டாரம் கூறும்போது, “விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது. ஏனெனில் நாங்கள் அவர்களிடம் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்கிறோம் என்று கூறினோமே தவிர, பிரதமரை சந்திக்கலாம் என்று கூறவில்லை. இப்போது அவர்களை அழைத்துச் சென்ற எங்கள் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
பிறகு ஜந்தர் மந்தர் திரும்பிய தமிழக விவசாயிகள் அங்கு தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இவர்களை திமுக எம்.பி. திருச்சி சிவா, மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
செய்தியாளர்களிடம் நக்மா கூறும்போது, “மத்திய அரசு மாட்டி றைச்சிக்கு அளிக்கும் முக்கியத் துவம் கூட விவசாயிகளுக்கு அளிக்கவில்லை” என்றார்.