

‘தமிழக மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவதே அதிமுகவின் லட்சியம்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
''திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும், இன்ன பிற அமைப்புகளிலும் இதுநாள் வரை பணியாற்றி வந்த 11,967 பேர் இன்று என் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளீர்கள்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன். அதிமுக உண்மையான ஜனநாயகம் நிலவுகின்ற ஓர் அரசியல் இயக்கமாகும்.
நீங்கள் வந்துள்ள இடம் நல்ல இடம். எத்தகைய நம்பிக்கையுடன் இந்த கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கை ஒரு போதும் வீண் போகாது, என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவின் லட்சியம், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். வளமான தமிழகத்தைப் படைத்து, எல்லோரும் பயன்பெற வேண்டும், சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே ஆகும். இதனை நன்கு உணர்ந்து தான், நீங்கள் அனைவரும் இன்று என்னுடைய தலைமையில் கழகப் பணியாற்ற வந்திருக்கிறீர்கள்.
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக, தமிழகத்தை உருவாக்கிட, அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் எனக்கு, நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும் அரசியலில் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா பேசினார்.