Published : 07 Aug 2016 02:24 PM
Last Updated : 07 Aug 2016 02:24 PM

சுற்றுலாத் துறையில் மத்திய அரசின் நிதி உதவி மூன்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லையா?: விளக்கம் கோரும் கருணாநிதி

சுற்றுலாத் துறையில் மத்திய அரசின் நிதி உதவியை தமிழக அரசு 3 ஆண்டுகளாக பயன்படுத்தவில்லையா என்று கேள்வி எழுப்பி, விளக்கம் கோரியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்தியா முழுவதிலும் உள்ள ஆய்வாளர்களும், வல்லுநர்களும் Tamil Nadu is the most rapidly urbanising State என்று சொல்கிறார்கள் என்றால், கிராமங்கள் எல்லாம் அந்த அளவுக்கு இந்த ஆட்சியில் முன்னேறி வருகின்றன என்று பொருள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பேரவையில் சொல்லியிருக்கிறார். மேலும் அவரது அரசு உலகில் உள்ள பல்வேறு அமைப்புகளால் பெற்ற பத்து விருதுகளையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்ட விருது ஒன்றை நேற்று (6-8-2016) “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடு வெளியிட்டுள்ளது.

“TN didn’t use Central Tourism funds for three years - State fails to submit Utilization Certificates” என்ற தலைப்பில் அந்தச் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி, இந்தியாவில் சுற்றுலா பயணிகள் வந்து போகின்ற இடங்களில் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முன்னிலையில் இருந்த போதிலும், இந்த மாநிலம் கடந்த மூன்றாண்டுகாலமாக மத்திய அரசின் நிதி உதவியைப் பெறத் தவறிவிட்டது என்று மாநிலங்களவையில் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்திற்காக ஒப்புதல் வழங்கப்பட்ட பணிகளை நிறைவேற்றியதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ்களை வழங்காத காரணத்தினால், 2013-14, 2014-15 மற்றும் 2015-16ஆம் நிதி ஆண்டுகளுக்கு சுற்றுலா தொடர்பான எந்தத் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியிருக்கிறார். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றுலாத் துறை சம்பந்தப்பட்ட திட்டங்களுக்காக, அந்த அரசுகள் தாக்கல் செய்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் நிதி உதவிகள் செய்கின்றன.

ஆனால் தமிழ் நாடு அரசு எந்த நிதி உதவியையும் மத்திய அரசிடமிருந்து பெறவில்லை. ஆனால் ஆந்திர பிரதேசம் 28 கோடி ரூபாயையும், கேரளா 99 கோடி ரூபாயையும், புதுவை 85 கோடி ரூபாயையும் “சுயதேஷ் தர்ஷ”திட்டத்திற்கான நிதி உதவி பெற்றுள்ளன.

இது பற்றி விவரம் கேட்பதற்காக “டைம்ஸ் ஆப் இந்தியா”சார்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநரைத் தொடர்பு கொண்ட போது, எந்தத் தகவலும் இல்லை. இதற்கு முந்தைய இரண்டு ஆண்டு களில் தமிழ்நாடு 19 கோடி ரூபாய் நிதி உதவியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது.

இதற்கு முன்பு மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், தமிழக அரசு கடந்த ஒரு சில ஆண்டுகளாக பல்வேறு துறைகளின் நிதி உதவியைப் பெற வில்லை என்றும், பெற்றாலும் அதைச் சரிவர முழுமையாகச் செலவு செய்யவில்லை என்றும் புள்ளி விபரங்களோடு கூறி வந்துள்ள நிலையில், பேரவையில் அதைப்பற்றி எதிர்க் கட்சித் துணைத் தலைவர் தம்பி துரைமுருகன் எடுத்துக்காட்டி, அதற்கு நிதி யமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது பதிலில் மத்திய அரசு விடுவித்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தியதோடு, கூடுதல் நிதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் நேற்றையதினம் சுற்றுலாத் துறையில் மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற இந்தக் குறைபாடு “டைம்ஸ் ஆப் இந்தியா”நாளேட்டில் வெளி வந்துள்ளது. தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் அறிவிப்பையும் 110வது விதியின் பெயரால் வெளியிடுகின்ற தமிழக முதல் அமைச்சர் இதற்கான பதிலையும் உடனடியாகப் பேரவையில் விளக்கிடுவார் என்று நம்புவோமாக!

இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x