

ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய இளைஞர்கள் ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்திய போராட்டம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த இளைஞர்கள் இணைந்து அரும்பாக்கத்தில் ஒரு ஓட்டலில் புதிய கட்சியை நேற்று தொடங்கினர். புதிய அரசியல் கட்சிக்கு ‘என் தேசம் என் உரிமை’ என்று பெயரிட்டுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப் பாளர்கள் எபினேசர், சத்யா, பிரவீணா, சுகன்யா, கார்த்தி, சுதந்திர தேவி, பிரகாஷ், பிரசாத் ஆகியோர் கட்சியின் பெயரை அறிவித்தனர். அதைத் தொடர்ந்து கட்சி கொடியையும் அறிமுகம் செய்தனர். தேசிய கொடியின் வண்ணமும், கொடியின் நடுவில் இளைஞர் ஒருவர் அடிமை சங்கிலியை உடைத்தது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது.
புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும் இன்று தொடங்கியது. 10 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். நிர்வாகிகளாக வர விரும்புபவர்கள் அதற்காக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். நிர்வாகிகளாக விரும்புபவர்களுக்கு தனி தேர்வு வைத்திருந்தனர். அதற்காக ஒரு பெரிய அரங்கில் 4 குழுவினர் அமர்ந்திருந்தனர். அந்த குழுவினர் நிர்வாகியாக விரும்பியவர்களிடம் கேள்வி கேட்டனர்.
உங்கள் பகுதியில் நீங்கள் எந்த அளவுக்கு பிரபலம் ஆனவர்? ஊழல் அற்ற தமிழ்நாட்டை உருவாக்க செய்ய வேண்டிய பணிகள் என்ன? நமது கட்சியை நிலைப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் நீங்கள் சொல்லும் 5 வழிகள் என்ன? விவசாயிகள் நலனுக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? பெண்களின் பாதுகாப்பை உயர்த்துவதிலும், அதிகாரப் பதிவிலும் உங்களது யோசனைகள் என்ன? இளைஞர்களின் வேலை வாய்ப்பை எவ்வாறு அதிகரிப்பது? இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த சட்டத்தை மாற்றியமைப்பீர்கள்? மேற்கண்ட 7 கேள்விகளுக்கும் அவர்கள் சொல்லும் பதிலை கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து கொண்டனர்.
அவர்களுடைய திறமைகளின் அடிப்படையில் நிர்வாகிகள் பொறுப்பு வழங்கப்படுகிறது.