

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மக்கள் சிவில் உரிமைக் கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நவம்பர் 9-ம் தேதி சென்னை வருகிறார். இதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக் கழக பொதுச் செயலாளர் ச.பாலமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், மனித உரிமைப் போராளியுமான மறைந்த கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகர் வித்யோதயா பள்ளி அரங்கில் நவம்பர் 9-ம் தேதி நடக்க உள்ளது. இதில் ‘பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் உரையாற்ற உள்ளார்.
மறைந்த கே.ஜி.கண்ணபிரானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலும், இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்ற பின்னர், இந்தியாவில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். எனவே, ஜனநாயக ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் பாலமுருகன் கூறியுள்ளார்.