

‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் மதன். எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. பல மாதங்கள் தலைமறைவாக இருந்த மதனை கடந்த நவம்பரில் திருப்பூரில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புழல் சிறையில் ஜெயிலர் ஜெயராமன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது வேந்தர் மூவிஸ் மதன் மறைத்து வைத்திருந்த ரூ.14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த தனிப்படையினர், அதை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். மதனிடம் பணத்தை கொடுத்துச் சென்றது யார்? என்று சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.