Last Updated : 28 Oct, 2014 08:19 AM

 

Published : 28 Oct 2014 08:19 AM
Last Updated : 28 Oct 2014 08:19 AM

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: புதிய தலைமை தேர்தல் அதிகாரிக்கு காத்திருக்கும் முதல் சவால்

தமிழகத்தின் 26-வது தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் சக்சேனாவுக்கு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்தான் முதல் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக 2010 முதல் பதவி வகித்து வந்த பிரவீண் குமார், தன்னை அப்பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணை யத்தை கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, தமிழக அரசு அனுப்பிய 3 பேர் கொண்ட பட்டியலை பரிசீலித்த தேர்தல் ஆணையம், வேளாண் துறை செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையராக உள்ள சந்தீப் சக்சேனாவை தேர்வு செய்தது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் அதிகாரியாக சக்சேனா இன்று பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மதியம் பிரவீண் குமாரும், சந்தீப் சக்சேனாவும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

வாழ்க்கைக் குறிப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த சக்சேனா, 1966-ம் ஆண்டு பிறந்தவர். சிவில் இன்ஜினீயரிங் முடித்து, ஐஐடியில் எம்.டெக் (நீர்வள மேலாண்மை) பயின்ற இவர், சர்வதேச நிதியாளுமையில் எம்.பி.ஏ. பட்டமும், பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் ஆராய்ச்சியில் பி.ஹெச்டி பட்டத்தையும் பெற்றார்.

1989-ம் ஆண்டில் ஐஏஎஸ் பணிக்கு தேர்வான சந்தீப் சக்சேனா, பயிற்சி முடித்ததும் 1990-ல் சேலம் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார் . பிறகு கோவை, திண்டுக் கல்லில் கூடுதல் கலெக்டராக பதவி வகித்தார். 1998 முதல் 2001 வரை கடலூர் கலெக்டராக இருந்தார். பின்னர், வருவாய்த்துறை கூடுதல் செயலாளர், வணிகவரித்துறை கூடுதல் ஆணையர், தமிழக சர்க்கரை கழக ஆணையர் (2006-2008), தமிழ்நாடு மருத்துவப் பணிகள் நிறுவன மேலாண் இயக்கு நர், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் (2010) போன்ற பதவிகளை வகித் துள்ளார். சிறிதுகாலம் (2004-05) மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக வேளாண் துறை முதன்மைச் செயலராக பொறுப்பு வகித்து வந்தார்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இன்னும் 5 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இந்த தொகுதியில் மிகப் பெரிய வெற்றியை பெற்று, தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளும்கட்சியான அதிமுக கருதுகிறது. அதே நேரத்தில், 2016 தேர்தலுக்கு முன்னோட்டமாக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் அமையும் என்பதால், எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டக்கூடும். எனவே, இந்த இடைத்தேர்தலை நடத்தி முடிப்பதுதான், புதிய தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு முதல் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

தமிழக அரசு அனுப்பிய 3 பேர் கொண்ட பட்டியலை பரிசீலித்த தேர்தல் ஆணையம், வேளாண்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவை தேர்வு செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x