

தமிழகத்தில் உள்ள நதிகளைக் காக்க இளைஞர்கள், விவசாய அமைப்புகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கொண்ட அரசியல் சாராத இயக்கம் தொடங்க உள்ளதாக அன்புமணி ராமதாஸ் எம்பி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதால் சிவகாசியில் பட்டாசு தொழில் நலிவடைந்து வருகிறது. அதைத் தொடர்ந்து, சீனப் பட்டாசு இறக்குமதியை தடுக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. நடப்பு ஆண்டிலும் தொடர்ந்து சீனப் பட்டாசு இறக்குமதி தடையை மேற்கொள்ள வேண்டும்.
ஆலைக் கழிவு ஆற்றில் கலப்பதால், தாமிரபணி மாசடைந்துள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலியில் மாணவர்கள், விவசாய சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரிமா மற்றும் ரோட்டரி சங்கங்களை அழைத்துப் பேச உள்ளேன். அதைத் தொடர்ந்து, நதிகளைக் காக்க அரசியல் சாராத இயக்கத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் நடத்த வேண்டும். அனைத்துக் கட்சியினரோடு பிரதமரைச் சந்தித்து இதுகுறித்து முறையிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்றார்.