

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாலை நேரங்களில் வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 21 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் இன்று பகல் நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், ''தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 80.6 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக இருக்கும்.
தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலையாக தூத்துக்குடியில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரையில் 100.76 ஃபாரன்ஹீட், திருச்சியில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட், கடலூரில் 99.68 டிகிரி ஃபாரன்ஹீட், பரங்கிப்பேட்டையில் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட், சென்னையில் 98.42 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. மழையை பொருத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக வால்பாறையில் 18.6 மி.மீ, உதகையில் 16.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.